வீடெங்கும் மூட்டைப்பூச்சி பரவி, அதற்கு மருந்தடித்து, ஒரு இரவை வெளியில் தங்க நேரிட்டு, அந்த இரவில் பார்த்த படம் இது (அதுவும் முதல் வரிசை சீட்டில்). செத்தும் கெடுத்தது மூட்டைப்பூச்சி.
முதல் பாடலில் வினயும் வெள்ளைத்தோல் அழகிகளும் ஆடும் பாடலில் எங்கே மேலே விழுந்து விடுவார்களோ என்ற பயத்திலேயே பார்த்தேன். விழுந்தாலும் பரவாயில்லை என்றான் என் நண்பன். அருகில் இருந்து பார்த்ததில் தெரிந்த இன்னொரு விஷயம், வினய்க்கு பல்லெல்லாம் பான்பராக் போல கறை. வினயின் குரல் பற்றி கட்டாயம் சொல்லி ஆக வேண்டும். அது அவரது சொந்த குரலா என்று தெரியவில்லை. உன்னாலே உன்னாலேயில் ஜான்சி ஜான்சி என்று உருகிய குரல், இந்த படத்தில் கட்டைக்குரலில் சேட் போல தமிழைக்கடித்து விழுங்குகிறது.
காஜல் அகர்வாலுக்கு ஒப்பனை கொஞ்சம் அதிகம் (நன்றி: முதல் வரிசை சீட்). மற்றபடி நடிக்கிறார். கவரும் வகையில் படத்தின் முதல் பாதியை நகர்த்துவதில் இவரும் முட்டுக்கொடுத்துள்ளார்.
சந்தானம், கலாபவன் மணி, கொச்சின் ஹனீஃபா, மயில்சாமி போன்றோர் இருக்கிறார்கள். கொஞ்சம் காமெடிகூட முயன்றிருக்கிறார்கள்.
“பாதி காதல் பாதி முத்தம்” பாடல் அருமை. படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ”மோதி விளையாடு” பாடலில் தேனிசைத்தென்றல் தேவா, ஹரிஹரன் மற்றும் அவரது கலோனியல் மச்சானும் வருகின்றனர். அடி பொலியான பாடல் அது. படத்தின் பின்பாதியில் வரும் ஒரே நல்ல விஷயம்.
சரணின் படத்தில் எப்போதும் கதை நகரும் கதைக்களம் வித்தியாசமானதாகவும், வலுவாகவும் இருக்கும். இந்த படத்தில் அது பெரிய அளவில் மிஸ்ஸிங். ஒரு வீடு தெருக்களில் பாதி மலேசியத்தெருக்கள். படத்தில் வரும் அவரது அலுவலகம் கூட மலேசிய விமான நிலையம் போல் இருக்கிறது. (ஆங்காங்கு keluar – exit என்று போர்டுகள்)
மொத்தத்தில் படம் முதல் பாதியோடு முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இரண்டாம் பாதி மோசம்.
ஒருமுறை தாராளமாக/மட்டும் பார்க்கலாம்.
2 Comments
நல்ல வேலை – நானும் அந்த படத்தை வினய்க்காகவே பார்க்கலாமுன்னு இருந்தேன் …
நன்றி பா.
//ஒரு வீடு தெருக்களில் பாதி மலேசியத்தெருக்கள். படத்தில் வரும் அவரது அலுவலகம் கூட மலேசிய விமான நிலையம் போல் இருக்கிறது. (ஆங்காங்கு keluar – exit என்று போர்டுகள்)//
மாதிரி இல்லைங்க.. சாட்சாட் அதேதான்.. KLIA தான் கலாபவன் மணியின் ஆபிஸாம்… என்ன கொடுமை இது!!!!