காதில் பூ வைத்துக்கொண்டு, வாயை லேசாக திறந்துகொண்டு பார்த்தால் 2012 படம் மிரட்டி எடுக்கிறது.
2012ம் வருடம் உலகம் அழிந்து போகும் என்கிற பிரசித்தி பெற்ற மாயன் கதையைவிஞ்ஞானப்பூர்வமாக காட்டி இருக்கிறார்கள். 157 நிமிடங்கள் படம் ஓடும் என்றபோதே தெரிந்துவிட்டது இவர்கள் முடிந்தவரை திரையில் விளையாடி இருக்கிறார்கள் என்று.
2012ல் உலகத்தில் பல அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தேறி உலகம் அழியும் நிலைக்கு தள்ளப்படுகிறது. அந்த சம்பவம் நடந்தால் தப்பிப்பதற்கு சில மிகப்பெரிய கப்பல்கள்(Nova’s Arc போல) கட்டப்படுகின்றன. அந்த கப்பலை பயன்படுத்தி என்ன செய்தார்கள் என்பது ட்விட்டர் சுருக்கமான கதை.
இந்த கதைக்கு பிள்ளையார் சுழி போடுவது ஒரு இந்திய விஞ்ஞானி, அவர் மூலம் தான் இந்த விஷயமே அமெரிக்காவிற்கு தெரிய வருகிறது. இதில் ஒரு விவாகரத்தான தம்பதி மற்றும் குழந்தைகள், ஒரு பணக்காரரும் அவரது குடும்பமும், பணக்காரரின் காதலியும் அவளது திருட்டு காதலனும், அமெரிக்க ஜனாதிபதியும் அவரது மகளும், ஒரு அமெரிக்க விஞ்ஞானியும் அவரது அப்பாவும் என்று சில கிளைக்கதைகளும் உண்டு. உயிர் போகும் நேரத்திலும் அபார கிஸ் அடிக்கும் வழக்கம் இந்த படத்திலும் தொடர்கிறது.
கிராபிக்ஸ் காட்சிகள்தான் படத்தின் உயிர்நாடியே, அதையே காட்டிக்கொண்டிருந்தால் கதை கந்தலாகி விடும் என்று இடையில் சில இழுவைக்காட்சிகள் வைத்துள்ளனர்.
நாசாவே முன்வந்து 2012 பற்றிய அறிவியல் கதைகள் பொய்யானவை என்று படம் வெளியிடுவதற்கு முன் தெரிவித்தது. ஜாஸ் படம் பார்த்து கடற்கரைக்கு செல்ல பயந்த நாட்டிற்கு தேவையான ஒரு விஷயம்தான்.
உலகம் அழிந்தால் இப்படித்தான் அழியும் என்று மிரட்டலாக காண்பித்த (ஒரே) விஷயத்தில் இந்த படம் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு படம். உலகம் அழியும் காட்சிகள் ஒரு நொடியாவது உங்களை உலுக்கும்.
பி.கு: முன்வரிசையில் உட்கார்ந்து இந்த படம் பார்க்காதீர்கள், தலைவலி பின்னி எடுக்கிறது. (என் தலையெழுத்து எப்போதும் முன் வரிசைதான் கிடைக்கிறது)