2012

காதில் பூ வைத்துக்கொண்டு, வாயை லேசாக திறந்துகொண்டு பார்த்தால் 2012 படம் மிரட்டி எடுக்கிறது.

2012ம் வருடம் உலகம் அழிந்து போகும் என்கிற பிரசித்தி பெற்ற மாயன் கதையைவிஞ்ஞானப்பூர்வமாக காட்டி இருக்கிறார்கள். 157 நிமிடங்கள் படம் ஓடும் என்றபோதே தெரிந்துவிட்டது இவர்கள் முடிந்தவரை திரையில் விளையாடி இருக்கிறார்கள் என்று.

2012ல் உலகத்தில் பல அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தேறி உலகம் அழியும் நிலைக்கு தள்ளப்படுகிறது. அந்த சம்பவம் நடந்தால் தப்பிப்பதற்கு சில மிகப்பெரிய கப்பல்கள்(Nova’s Arc போல) கட்டப்படுகின்றன. அந்த கப்பலை பயன்படுத்தி என்ன செய்தார்கள் என்பது ட்விட்டர் சுருக்கமான கதை.

இந்த கதைக்கு பிள்ளையார் சுழி போடுவது ஒரு இந்திய விஞ்ஞானி, அவர் மூலம் தான் இந்த விஷயமே அமெரிக்காவிற்கு தெரிய வருகிறது. இதில் ஒரு விவாகரத்தான தம்பதி மற்றும் குழந்தைகள், ஒரு பணக்காரரும் அவரது குடும்பமும், பணக்காரரின் காதலியும் அவளது திருட்டு காதலனும், அமெரிக்க ஜனாதிபதியும் அவரது மகளும், ஒரு அமெரிக்க விஞ்ஞானியும் அவரது அப்பாவும் என்று சில கிளைக்கதைகளும் உண்டு. உயிர் போகும் நேரத்திலும் அபார கிஸ் அடிக்கும் வழக்கம் இந்த படத்திலும் தொடர்கிறது.

கிராபிக்ஸ் காட்சிகள்தான் படத்தின் உயிர்நாடியே, அதையே காட்டிக்கொண்டிருந்தால் கதை கந்தலாகி விடும் என்று இடையில் சில இழுவைக்காட்சிகள் வைத்துள்ளனர்.

நாசாவே முன்வந்து 2012 பற்றிய அறிவியல் கதைகள் பொய்யானவை என்று படம் வெளியிடுவதற்கு முன் தெரிவித்தது. ஜாஸ் படம் பார்த்து கடற்கரைக்கு செல்ல பயந்த நாட்டிற்கு தேவையான ஒரு விஷயம்தான்.

உலகம் அழிந்தால் இப்படித்தான் அழியும் என்று மிரட்டலாக காண்பித்த (ஒரே) விஷயத்தில் இந்த படம் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு படம்.  உலகம் அழியும் காட்சிகள் ஒரு நொடியாவது உங்களை உலுக்கும்.

பி.கு: முன்வரிசையில் உட்கார்ந்து இந்த படம் பார்க்காதீர்கள், தலைவலி பின்னி எடுக்கிறது. (என் தலையெழுத்து எப்போதும் முன் வரிசைதான் கிடைக்கிறது)

Posted in Experience, Movies | Tagged | Leave a comment

அசைன்மென்ட் – சர்வேசன்500 – ‘நச்’னு ஒரு கதை 2009

கொடுத்த வேலையை நேரத்தில் செய்து முடிப்பது என் ஜீனிலேயே இல்லை. ஏன் என் குடும்ப ஜீனிலேயே இல்லை. என் அப்பாவிடம் இருந்து கடன் வாங்கிய வரிகள். ஒரு வேலை வந்தவுடன் மனது உடனே திட்டங்கள் தீட்டும் ஆனால் திட்டங்கள் வெற்றி அடைந்த வரலாறு குறைவு. Tom, Jerry-ஐ எப்போதாவது வெல்வது போல.

ஒவ்வொரு வருட டைரியிலும் முதலில் எழுதுவது வேலையை நேரத்தில் செய்வது பற்றிய வருடத்தீர்மானம்தான். ஆனாலும் கொஞ்சநாளில் டைரி மூலைக்கு சென்றுவிடும், வருடத்தீர்மானத்தையும் அழைத்துக்கொண்டு.

இம்முறை இந்த அசைன்மென்ட் முக்கியமானது. என் மானம் இதில்தான் இருக்கிறது. சென்றமுறை கொடுத்த அசைன்மென்ட்டை குறித்தநேரத்தில் முடிக்கமுடியாமல் போய் விஷயம் விவகாரம் ஆகி மேலிடம் எல்லாம் சென்றாகிவிட்டது. அவமானம் பிடுங்கித்தின்றது. இந்த சதீஷ் வேறு கிண்டலாக(உறுதியாக கிண்டல் என்று சொல்லமுடியாது) “அடுத்த முறை ஏதாவது ஹெல்ப் வேண்டுமா?” என்று கேட்டுத்தொலைந்தான். ரேகா சரியான நேரத்தில் அசைன்மென்ட்டை முடித்துவிட்டு முறைத்துக்கொண்டு இருந்தாள்.

இந்தமுறை முடித்திருக்கலாம்தான். திட்டம்கூட பிரமாதமாக போட்டிருந்தேன். முதல்நாளே கால்வாசியை முடித்துவிடவேண்டும். பிறகு படிப்படியாக அழகாக சிறப்பாக முடிக்கவேண்டும். எல்லாம் திட்டம்தான். ஆனால் எதிர்பாராதவிதமாக… என்ன காரணம் வந்திருந்தால் என்ன? காரணம் எல்லாம் சொல்லக்கூடிய நிலையில் நான் இல்லை, எல்லாம் சென்ற அசைன்மென்ட் செய்தவேலை. வீட்டில் ஒன்றும் பெரிய வேலை இல்லை. எனக்கெப்போதும் வீட்டில் வேலை கொடுப்பதில்லை. என் வேலையை ஒழுங்காக பார்த்துக்கொண்டிருந்தாலே போதும். ஆனால் அதுவே பெரிய விஷயம்.

12 மணிநேரம். காலை 9 மணி ஆக இன்னும் 12 மணி நேரம் மட்டுமே இருக்கின்றன. இப்போது ஆரம்பித்தால்கூட இரவு 12 மணிக்குள் முடித்துவிடலாம். சரி இதை யோசிக்கும் நேரத்தில் முடிக்க முயற்சி செய்கிறேன்.

வேலை இல்லாத நாட்களில் கடிகாரத்தின் வேகத்தை பார்த்ததில்லை. ஆனால் இன்று வேகமாக நகர்ந்திருக்கின்றது. 2 தோசைகளை சாப்பிட எனக்கு 30 நிமிடங்கள் பிடிக்கின்றது என்பதே என்னால் இன்றுதான் உணர முடிந்தது. அம்மா சிறுவயதில் இருந்து சொல்லுவாள், ‘இவ்வளவு நேரம் நீ சாப்பிட்டுக்கிட்டு இருந்தா கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு சமைக்க நேரமே கிடைக்காது’.

மணி 11, தூக்கம் கண்களை சுழற்றத்துவங்கியது. வெறும் 10 சதவீதம் கூட முடிக்கவில்லை. நாளை என் கண்முன் தெரிந்தது. அதுவும் தெளிவின்றி தூக்கம் மறைத்து கலங்கலாய் தெரிந்தது. நாளைக்கும் எப்படியாவது சமாளித்து இன்னும் நேரம் கேட்கவேண்டும் என்ற யோசனையுடன் தூங்கிப்போயிருந்தாள்.

காலை 8 மணிக்கு வீட்டைவிட்டு வெளியே வந்து பேருந்தில் ஏறிய பின்தான் அசைன்மென்ட்டை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது தெரிந்தது. ஆக இன்று சமாளிப்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கடினமானதாக இருக்கும்.

பேருந்தில் இருந்து நேரே இறங்கிச்செல்லும்போதே தூரத்தில் என் 4‍-A வகுப்பறை எனக்கு எமன் போல் காத்திருந்தது. அனைவரும் அசைன்மென்ட்டை அழகுபடுத்திக்கொண்டு இருந்தார்கள். எனக்கு லேசாக ஜுரம் வந்துகொண்டிருந்தது. பேசாமல் வயிற்றுவலி என்று லீவாவது போட்டிருக்கலாம். இந்த டீச்சர் இன்று என்னை கிழித்து சென்றமுறை போல் ஹெட்மாஸ்டரிடம் அழைத்துச்சென்றுவிடுவாள். சரியாக Tom-இடம் வால் மாட்டிய Jerry-யாக உணர்ந்தேன்.

பள்ளியில் மணியடித்தது என் வயிற்றுக்குள் அடித்தது.

ஆனால் மணி அடித்தபின் தான் தெரிந்தது இன்று டீச்சர் லீவ் என்று. பிறகென்ன முதல் பீரியடே விளையாட்டுதான். இல்லை இல்லை இன்றாவது முடிக்கவேண்டும்.

குழந்தைபோல் ஹெட்மிஸ்ட்ரஸ் கொடுத்த இன்ஸ்பெக்‌ஷனுக்கான அசைன்மெண்ட்டை முடிக்காமல் லீவ் போட்டதை அம்மா  கிண்டல் செய்ய,

சிரித்தாள் டீச்சர்.

சர்வேசன்500 – ‘நச்’னு ஒரு கதை 2009 – போட்டி

குழப்பத்துக்கு மன்னிக்கவும். கதையில் எதிர்பார்த்த நச் ஃபேக்டர் வராததால், முடிவை லேசாக மாற்றி இருக்கிறேன். நீங்கள் இப்படி பார்த்தது புதிய முடிவு. அந்த இடத்தை கீழ் உள்ள வரிகளால் மாற்றினால், உங்களுக்கு பழைய முடிவு கிடைக்கும் :)

பழைய முடிவு:

இன்னும் 5 நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிடும் என்று நினைத்தபோது ஆரம்பித்த தும்மல் நிற்காமல் வந்தது.

அடுத்த அரை மணிநேரத்தில் அம்மா ‘ஏன்டி அதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்ட?’ என்று கேட்டபோது ‘ஏதோ பன்னிஜுரம்’ என்று ஏதோ தெரியாத விஷயங்களை சொல்லிக்கொண்டிருந்தேன்.

Posted in Story | Tagged , , | 26 Comments

மோதி விளையாடு – மூட்டைப்பூச்சிகளின் துரத்தல்

வீடெங்கும் மூட்டைப்பூச்சி பரவி, அதற்கு மருந்தடித்து, ஒரு இரவை வெளியில் தங்க நேரிட்டு, அந்த இரவில் பார்த்த படம் இது (அதுவும் முதல் வரிசை சீட்டில்). செத்தும் கெடுத்தது மூட்டைப்பூச்சி.

முதல் பாடலில் வினயும் வெள்ளைத்தோல் அழகிகளும் ஆடும் பாடலில் எங்கே மேலே விழுந்து விடுவார்களோ என்ற பயத்திலேயே பார்த்தேன். விழுந்தாலும் பரவாயில்லை என்றான் என் நண்பன். அருகில் இருந்து பார்த்ததில் தெரிந்த இன்னொரு விஷயம், வினய்க்கு பல்லெல்லாம் பான்பராக் போல கறை. வினயின் குரல் பற்றி கட்டாயம் சொல்லி ஆக வேண்டும். அது அவரது சொந்த குரலா என்று தெரியவில்லை. உன்னாலே உன்னாலேயில் ஜான்சி ஜான்சி என்று உருகிய குரல், இந்த படத்தில் கட்டைக்குரலில் சேட் போல தமிழைக்கடித்து விழுங்குகிறது.

காஜல் அகர்வாலுக்கு ஒப்பனை கொஞ்சம் அதிகம் (நன்றி: முதல் வரிசை சீட்). மற்றபடி நடிக்கிறார். கவரும் வகையில் படத்தின் முதல் பாதியை நகர்த்துவதில் இவரும் முட்டுக்கொடுத்துள்ளார்.

சந்தானம், கலாபவன் மணி, கொச்சின் ஹனீஃபா, மயில்சாமி போன்றோர் இருக்கிறார்கள். கொஞ்சம் காமெடிகூட முயன்றிருக்கிறார்கள்.

“பாதி காதல் பாதி முத்தம்” பாடல் அருமை. படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ”மோதி விளையாடு” பாடலில் தேனிசைத்தென்றல் தேவா, ஹரிஹரன் மற்றும் அவரது கலோனியல் மச்சானும் வருகின்றனர். அடி பொலியான பாடல் அது. படத்தின் பின்பாதியில் வரும் ஒரே நல்ல விஷயம்.

சரணின் படத்தில் எப்போதும் கதை நகரும் கதைக்களம் வித்தியாசமானதாகவும், வலுவாகவும் இருக்கும். இந்த படத்தில் அது பெரிய அளவில் மிஸ்ஸிங். ஒரு வீடு தெருக்களில் பாதி மலேசியத்தெருக்கள். படத்தில் வரும் அவரது அலுவலகம் கூட மலேசிய விமான நிலையம் போல் இருக்கிறது. (ஆங்காங்கு keluar – exit என்று போர்டுகள்)

மொத்தத்தில் படம் முதல் பாதியோடு முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இரண்டாம் பாதி மோசம்.

ஒருமுறை தாராளமாக/மட்டும் பார்க்கலாம்.

Posted in Movies | Tagged | 2 Comments

ஒரு மரணமும் மெகாதேர்தல் புதிரின் சப்பை விடையும்

அந்த சம்பவத்தை மரணம் என்று சொல்ல என் மனம் ஒத்துவரவில்லை. கொலை என்றுதான் அதை அழைக்கச்சொல்கிறது. கொல்லப்பட்டவரை பற்றி அவதூறு பேசினால் இந்த சமயத்தில் புத்திஜீவி பட்டம் கிடைக்கலாம். ஆதரவாக பேச இனி என்ன இருக்கிறது. டயானாவின் மரணத்திற்கு பின் என்னை பாதித்த பிரபல மறைவு இது. ஆனால் டயானா என் இளவயதில் பிம்பம் மட்டுமே.

ஒருவன் துப்பாக்கியோடு வரும்போது அவனை எதிர்த்து சத்தியாகிரகம் செய்யச்சொல்வது, கற்பழிக்கவருபவனிடம் காண்டம் கொடுப்பதற்கு சமமானது.

ஒரே ஒரு மிகப்பெரிய ஆறுதல், நேற்று அவர் கனவில் வந்ததுதான். என் வீட்டில் இப்போதும் இருப்பது போல் உணர்கிறேன்

இந்தியத்தேர்தல் முடிவுகள் மிகச்சிறப்பாகவே இருந்தன. ரஜினி ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையான பா.ம.கவின் வாஷ் அவுட் இனிதே நடந்தது. பா.ம.கவை விட தே.மு.தி.க பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.

தி.மு.க. என்ற குடும்ப கார்பரேட் அடுத்த அடியை எடுத்துவைத்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட மற்றும் முற்றிலும் நேர்மையான ஒன்றுதான்.

பசங்க படம் ஒரு மஸ்ட் வாட்ச்.

ஏதாவது எழுதவேண்டும், உரையாடல் சிறுகதைப்போட்டியில் கலந்துகொள்ளவேண்டும், சிங்கைப்பதிவர் சந்திப்புகளில் கலந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணங்கள் நடக்கமுடியாதபடி வேலைகள் வந்தன.

இந்த 32 கேள்விகள் படு போர். சிலரின் பதில்கள் மட்டுமே சுவாரசியமாக இருந்தன. சிலர் இதற்கு போய் காட்டுத்தனமாய் யோசித்து புத்திசாலித்தனமாய் எழுதி இருந்தது செம காமெடி. கேள்விகளின் அடிப்படை எண்ணத்தையே கேள்விக்குறியாக்குகின்றது.

தினமும் ஒருவராவது “சுய இன்பம்” என்ற வார்த்தையைத்தேடி என் தளத்திற்கு வருகை தருகின்றனர். பேசாமல் அவர்களுக்காக ஒரு பதிவு இடப்போகிறேன். எத்தனை ஏமாற்றங்கள் அந்த நண்பர்களுக்கு.

மைக்ரோசாஃப்ட் தனது முன்னங்காலை எடுத்து ஒரு பெரிய அடி வைத்துள்ளது, கூகுளுக்கு போட்டி போடும் பிங். உண்மையில் பிங் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியாமல் போனால், அதன் இழப்பு மைக்ரோசாஃப்ட்டிற்கு மிகப்பெரியதாக இருக்க வாய்ப்பு உண்டு.

ஊல்ஃப்ரம் ஆல்ஃபா என்ற மற்றொரு தேடியந்திரமும் சளைக்காமல் போட்டி இடுகின்றது. ஆனால் இதன் குறி சாதாரண பயனர்கள் அல்ல.

இந்த தேடியந்திரங்கள் வந்ததும் அவசர அவசரமாக தத்தம் பெயர்கள், தளங்கள் ஆகியவற்றையே தேடி கிட்டத்தட்ட ஒரு Ego Surfing தளமாகவே மக்கள் ஆக்கிவிட்டிருந்தனர் ஆரம்பித்த சில நாட்களில்.

ஐபோன் 3GS வெளியாகி உள்ளது. இதன் மூலம், பழைய வெர்ஷனின் விலை பாதியாக அதாவது கிட்டத்தட்ட ரூ5000 ஆகும் என்கிறார்கள். ஆனால், ஐபோன் எப்போது ரூ10000கு விற்றது. ஐபோன் ஆபரேட்டரை/ஐடியூனை சார்ந்திருக்கும்வரை எனக்கு பிடிக்காது(கிட்டத்தட்ட எப்போதுமே :) ).

யூடியூபில் நிறைய தமிழ்,மலையாளப்படங்களைக்கொண்டு உள்ள சேனல் இது. எப்படி இத்தனை நாள் யூடியூப் பார்த்துக்கொண்டிருக்கிறதோ தெரியவில்லை, ஆனால் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ;)

Posted in Experience | Tagged | 6 Comments

வெளிநாட்டில் தமிழர்கள் (என்னையும் சேர்த்து)

வெளிநாட்டில் வசிக்கும்/தற்காலிகமாக சென்றிருக்கும் தமிழர்கள்(இந்தியர்கள் என்றும் கொள்ளலாம்) பற்றி நான் அவதானித்த சில கருத்துக்கள்.

  • ஓட்டு போடாவிட்டாலும் கூட தீவிரமாய் அரசியல் பேசுவார்கள்.
  • தமிழ்நாட்டில் இருக்கும்போது மெக்சிகன் ரெஸ்டாரண்ட் போய் சாப்பிட்டாலும், மெக்சிகோவில் இருக்கும்போது தமிழ் உணவு தேடுவார்கள்
  • ஒவ்வொரு முகத்தையும் உற்றுப்பார்த்து, எந்த ஊர் முகம் என்று தேடுவார்கள்
  • வெளிநாட்டினருடன் இருக்கும் போது பொதுவாக பேசுவது 1: “Actually in india, we are religious to this god, so today vegetarian food. This god once went to meet that god, they fought….”
  • வெளிநாட்டினருடன் இருக்கும் போது பொதுவாக பேசுவது 2: “You guys are lucky to born here. If you come to India, you will not get ****.” [**** - எந்த விஷயமாக இருந்தாலும்]
  • ஏதாவது ஒரு நல்ல சுற்றுலாத்தளத்தின் முன் நந்தி போல் நின்று, பெருமிதத்துடன் சிரித்து புகைப்படம் எடுத்து சகலத்திலும் அப்டேட் செய்து தொலைப்பார்கள்.
  • ஆண்கள், ஆண் நண்பர்கள் தோளில் கை போடுவார்கள், அதை ஊரே வேறு மாதிரி வேடிக்கைப்பார்க்கும்.
  • கடையில் பொருளை வாங்கும் முன், ஒரு சில நிமிடங்கள் அப்படியே உறைந்துபோய் இருப்பார்கள் (அது நம்மூர் பணத்திற்கு மாற்றி யோசிக்க‌)
  • இந்தியாவின் இன்டர்நெட் வேகத்தைப்பற்றி பேசும்போது, “நான் அனுப்பறேன். ஓ அங்க வேகம் கம்மி இல்ல, சரி விடு” என்பார்கள். [உண்மையில் BSNL வேகம் அட்டகாசம்]
  • அனைத்து உள்ளூர் படங்களையும் தரவிறக்கிப்பார்த்துவிட்டு, 1000 நொட்டை சொல்வார்கள்
  • ஏதோ டவுன்பஸ் நேரம் சொல்வது போல் விமான நேரங்கள் பற்றி ஊரில் உள்ளோருடன் சொல்வார்கள். [அங்கே வருவதோ ஒரு நாளைக்கு ஒன்றொ இரண்டோ விமானங்கள்தான்]
  • ஜிடாக்கில் எப்போதும் ஆன்லைனில் இருப்பார்கள் [அதுவும் ஆன்சைட் செல்லும் மக்கள்]
  • யாராவது நண்பர்கள் இந்தியா சென்றால், அவர்களை வழியனுப்பும் போது மறக்காமல் சொல்லும் வாக்கியம், “வரும்போது நிறைய வெயிட் கொண்டு வருவீங்களா?”
  • சொந்தமாக சமைக்கிறேன் பேர்வழி என்று, எதை சமைத்தாலும் நன்றாய் இருப்பதாக நினைத்துக்கொண்டு சாப்பிடுவது
  • வந்த கொஞ்ச நாட்களில், இந்தியா சென்று ஒரு அப்பாவி பெண்ணை கல்யாணம் கட்டிக்கூப்பிட்டு வருவது
  • அதற்கு வக்கில்லாமல் இதைப்போல் கிறுக்கித்தள்ளுவது
Posted in Experience | 41 Comments