நட்பை காதலாக மாற்றுவது எப்படி?

என் அறைத்தோழனும் அவனது பக்கத்து ஆத்து பெண்ணும் சிறு வயதில் இருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். பெண் இவனை விட சில வயது இளையவள். இவன் வேலைக்கு வந்த பின்பும் இருவரும் தினமும் தொலைபேசும் அளவு நட்புள்ளவர்கள்.

இவன் அவளை ரொம்ப ஆண்டுகளாக காதலித்துக்கொண்டு இருக்கிறான். எங்களிடம் சொல்லிய அவனால் அவளிடம் சொல்ல முடியவில்லை. அதற்கு காரணங்களும் அடுக்கி வைத்திருந்தான்.

இப்படி இருக்க, ஒரு நாள் ஞாயிறன்று அனைவரும் தூங்கிக்கொண்டு இருக்க, எனக்கு மட்டும் செம போர் அடித்தது. சரி ஏதோ நம்மாலான ஒரு நல்ல காரியம் செய்யலாம் என்று அவனது மொபைல்ஃபோனை எடுத்து, அந்த பெண்ணிற்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன்.

“சில விஷயங்களை சொற்களால் வெளிப்படுத்த முடியாது. மனதால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். வெளிப்படுத்த என் மனது தயார்….. இனிய காலை வணக்கம்”

சில நொடிகளில் அந்த பெண்ணிடம் இருந்து வந்த பதில்,

“என் மனதும் தயார்.”

இது போதுமே, அன்றைக்கு ஃபோனை காதில் வைத்தவன், இன்று வரை கீழே வைக்கவில்லை.

இதேபோல் நீங்களும் உங்கள் உயிர்த்தோழியை காதலியாக்க என்னாலான சில யோசனைகள்…


முதலில் உங்கள் தோழிக்கு உங்கள் மீது காதல் இருக்கின்றதா என்று சோதிக்கவேண்டும்.

  • உங்களை பார்த்ததும் சிரிக்கும் சிரிப்பில் ஒரு சந்தோஷமும், பாதுகாப்பும் இருக்கும்.
  • உங்களைப்பார்த்து சிரிக்கும் சிரிப்பிற்கும், மற்றவர்களை பார்த்து சிரிக்கும் சிரிப்பும் வித்தியாசமாக இருக்கும்
  • நீங்கள் அடுத்த பெண்ணிடம் பேசினாலோ, பசங்களுடன் பேசினாலோ ஒரு பொசசிவ்னெஸ் காண்பிப்பாள்
  • ஒரு நாள் கூட உங்களிடம் பேசாமல் இருக்க மாட்டாள்
  • விடுமுறை நாட்களில் கூட உங்களைப்பார்க்க விரும்புவாள்
  • மற்றவர்களைப்பற்றி உங்களிடம் புகார் செய்வாள் (பெண்/ஆண் நண்பர்கள்)
  • காசு விஷயத்தில் கொடுத்த காசை திரும்ப கேட்கமாட்டாள், ரெஸ்டாரண்டில் அவள் பணம் கொடுப்பாள்.
  • உங்கள் உடை விஷயத்தில் அக்கறை காட்டுவாள்
  • ஃபோனில் பேசும்போது கூட என்ன உடை அணிந்துவருகிறாய் என்று கேட்பாள்
  • ஒருமுறையாவது உங்களுக்காக அழுவாள்(அது சின்ன விஷயமாக இருந்தாலும்)
  • உங்களிடம் இருக்கும்போது, தான் பெண் என்பதை மறந்து இருப்பாள் (பாட்டு பாடலாம், உடை கலைந்து இருக்கலாம் etc)
  • சண்டை போட்டு நீங்கள் முறுக்கிக்கொண்டு இருந்தாலும், அவள் தானாக இறங்கி வருவாள்.
  • நீங்கள் அவளுடன் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவதற்கு சுதந்திரம் கொடுப்பாள்

காதல் இருப்பது உறுதியாயின், கீழ்க்கண்டவற்றை செயல்படுத்தி காதலாக்குங்கள்

  • தயவு செய்து முறுக்கிக்கொண்டு நிற்காமல், உடனடியாக காதலை சொல்லுங்கள்.
  • அவளுக்கு செல்லப்பெயர் வைத்து கூப்பிடுங்கள், அவளுக்கு பிடித்திருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளியை குறைத்துக்கொண்டே செல்லுங்கள்.
  • அவளை அடுத்த ஆண்களுடன் பழகவிடாதீர்கள்,  உங்களுக்கு பக்கத்து சீட்டை எப்போதும் அவளுக்காக துண்டு போட்டு வையுங்கள் and vice versa ;) .
  • மேலே சொன்ன கதைபோல் மெசேஜ் அல்லது ஈமெயில் அனுப்புங்கள்
  • இரவு நீண்டநேரம் பேசிக்கொண்டு(கடலை) இருக்கும்போது, அப்படியே லேசாக காதலை தலையைச்சுற்றி மூக்கைத்தொடுங்கள்
  • உங்கள் வீட்டில் அவளை அறிமுகப்படுத்துங்கள், உங்கள் குடும்பம் எவ்வளவு அழகு என்று காட்டுங்கள். முக்கியமாக உங்கள் அம்மாவிற்கும் அவளிற்கும் நல்ல உறவை ஏற்படுத்திக்கொடுங்கள்.
  • அவள் எங்கு கூப்பிட்டாலும் கூடவே செல்க. நெருக்கத்தில் உங்களை மறந்து பேசிக்கொண்டு இருக்கும்போது சொல்லி விடுங்கள்.
  • காதலைச்சொல்வதற்கு முன் ஒரு நிமிடம்(நிஜமாகவே 60 நொடிகள்) அவள் கண்ணையே பார்த்துக்கொண்டிருங்கள். அவள் கண்கள் நாணி, கண்களாலேயே என்ன வேண்டும் என்று கேட்கும்போது காதலைச்சொல்லுங்கள். கண்டிப்பாக சக்ஸஸ் தான்.
Posted in Experience | Tagged | 21 Comments

பவா செல்லதுரையும் பீமா படமும்

பவா செல்லதுரையை இலக்கியத்துறையில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் எனக்கும் தெரிந்திருக்கக்காரணம் நான் திருவண்ணாமலையில் படித்ததுதான்.

திருவண்ணாமலையில் நான் படிக்கும்போது முதலில் தங்கியிருந்தது செட்டித்தெருவில். செட்டித்தெருவில் நிறைய திருமணமண்டபங்கள் இருக்கும். மிகக்குறுகலான இந்த தெருவில் இருந்தது ஒரே ஒரு எஸ்டிடி பூத். அந்த எஸ்டிடி பூத்திற்கு பக்கத்தில் வம்சி பதிப்பகம் இருந்தது. அப்போது அங்கு அதிகம் காலண்டர்கள், திருமண அழைப்பிதழ்கள் போன்றவையே அதிகம் அச்சாகிக்கொண்டு இருந்தன. ஆனாலும் சிலப்பல இலக்கிய புத்தகங்கள் அங்கு விற்பனைக்கு இருந்தன.

எப்போது எஸ்டிடி பூத்திற்கு சென்றாலும் அந்த புத்தகங்கள் அப்படியே இருந்தன.  (அதற்காகவே அங்கு சென்று புத்தகம் வாங்கியிருக்கிறேன்) அங்கு பவா செல்லதுரை எப்போதாவது இருப்பார். எப்போதும் ஏதாவது ஒரு விவாதத்திலோ(ஒருவேளை பேசிக்கொண்டு இருந்தாரோ!) அப்போது எனக்கு அவரைப்பற்றிய அபிப்ராயம் ஏதும் இல்லை. அவருடையதாகத்தான் அந்த கடை இருக்கும் என்பது மட்டும்தான் தெரியும்.

அந்த நேரத்தில் சன்டிவியில் வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியில் பவா செல்லதுரை வந்ததாக நினைவு. அந்த சமயத்தில் அவர் முற்றம் என்ற நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டார்.

முற்றம் என்பது ஒரு தமிழ் இலக்கியவாதியை திருவண்ணாமலைக்கு அழைத்துவந்து, டேனிஷ் மிஷன் பள்ளியின் ஒரு திண்ணையில் வைத்து வந்தவருடன் நடக்கும் ஒரு கலந்துரையாடல். இதன் சிறப்பே யாருக்கும் இருக்கைகள் கிடையாது, அனைவரும் தரையில் அமர்ந்தே இருப்பர்.

இந்தமாதிரி ஒரு நிகழ்ச்சி நான் இருந்த திருவண்ணாமலையில் நடப்பதைப்பற்றி கேள்விப்பட்டவுடன், கட்டாயம் இதில் கலந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலுடன் அந்த நிகழ்ச்சியை எதிர்நோக்கியிருந்தேன். அந்த சமயத்தில் நாஞ்சில் நாடனை வரவழைத்திருந்தனர்.

“எத்தனையோ மேடைகள் பார்த்து இருக்கிறேன், ஆனால் இந்த மேடையைப்போல் மக்களுடன் மனந்திறந்து பேசும் வாய்ப்பு கிடைத்ததில்லை”, என்று ஜெயகாந்தன் முற்றத்திற்கு வந்தபோது கூறியதாக பவா அந்த முற்றத்தில் கூறினார்

அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களில் முக்கியமானவர் நம் பவா செல்லதுரை என்பதால் எனக்கு பிடித்திருந்தது. ஏதோ என் தெரு நண்பர் ஒருவரைப்போல் அவரை உணர்ந்தேன். அந்த முற்றம் நிகழ்ச்சியில் சேகுவாரா பற்றிய தமிழாக்க நூல் ஒன்றையும் வெளியிட்டனர்.

நிகழ்ச்சி முடிவில் நிறைய புத்தகங்கள் விற்கப்பட்டு கொண்டிருந்தன. அங்கு ஒருவர் புத்தக விலையை பேரம் பேசுவதாக பவாவிடம் நண்பர் ஒருவர் வந்து குறைகூறினார். அதற்கு பவா, “பணமெல்லாம் முக்கியம் இல்லை, கொடுத்து விடு” என்றார்.

கொஞ்ச நாட்களில் நானும் செட்டித்தெருவிலிருந்து கார்கானா தெருவிற்கு மாறிப்போனபின் பவாவை சுத்தமாக மறந்துவிட்டிருந்தேன். கிட்டத்தட்ட 1 வருடம் கழித்து எஸ்கேபி கல்லூரியில் ஒரு கலை இலக்கிய இரவு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்துகொள்ள நானும் என்னைப்போல் இலக்கிய ஈடுபாடு கொண்ட நண்பன் பச்சையும் கல்லூரிக்கு மட்டம்போட்டு விட்டு கிளம்பிச்சென்றோம்.

நாங்கள் சென்றபோது கதைசொல்லி நேரம் என்ற நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது, அந்த நிகழ்ச்சியில் நிறைய பிரபலங்கள் வந்திருந்தனர். எனக்கருகில் இருந்த திலகவதியிடம் ஒரு ஆட்டோகிராப் கூட வாங்கிக்கொண்டேன். வழக்கம் போல் இந்த நிகழ்ச்சியையும் சொந்தவீட்டு கல்யாணம் போல் எடுத்து நடத்திக்கொண்டிருந்தவர் பவா அவர்கள்.

சரி சும்மாதான் இருக்கப்போகிறார் என்றுபார்த்தால் அவரும் 2 கதைகளை படித்தார். அவர் படிக்கபடிக்க கதையின் கதாபாத்திரங்கள் மேடையில் இருந்து இறங்கி வந்தன. அந்த நிகழ்ச்சியை மொத்தமாக தன்பால் இழுத்து வைத்திருந்தார். எனக்கு ஒரு பெரும் பெருமை, என் நண்பர் ஒருவன் பாராட்டு பெறுவது போல.

இதுவரை நான் அவரிடம் பேசியதில்லை, பீமா படத்தில் விக்ரம் சிறுவயதில் இருந்து பிரகாஷ்ராஜைப்பார்த்து பார்த்து வளர்ந்தது போல், நான் பவாவைப்பார்த்து வியந்து இருக்கிறேன்.

கடைசியில் அவரும் இப்படி செய்துவிட்டார். ஆமாம் பதிவுலகத்தில் இருக்கிறார். இப்போதுதான் கொஞ்ச நாட்கள் முன்பு பார்த்தேன்.

அவரது பதிவு: http://bavachelladurai.blogspot.com/

நான் சொன்ன அந்த கதைசொல்லி நிகழ்ச்சியில் அவர் கூறிய இரண்டு கதைகள்:

Posted in Experience | Tagged , | 3 Comments

நானும் பதிவிடுகிறேன்

இந்த இலங்கை (அ) ஈழ விவகாரத்தை விட்டு எதுவும் வெளியில் எழுதமுடியாத அளவு மனது பாரமாய் இருந்தது. தமிழகத்தில் யாரும் அவர்களை தேர்தலுக்குப்பின் காப்பாற்றமாட்டார்கள் என்பதால் ஆல்ஃபாவும் ஒமேகாவுமாகவும், முதலும் முடிவுமாக இருக்கும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

இந்த முறை என் விரல் கறைபடாது. இந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு ஓட்டு போட்டு விரலைக்கெடுத்துக்கொள்ளும் வாய்ப்பை தடுத்த ரிசெஷனுக்கு நன்றி.

ரிசெஷன் என்ற தலைவலிக்கு நடுவில் ஸ்வைன் ஃப்ளூ என்று அடுத்த ஆப்பு வேறு தயாராகிவிட்டது. பறவையில் இருந்து இந்த முறை பன்றிக்குத்தாவியிருக்கிறது. என் ரூமில் இருக்கும் முஸ்லீம் நண்பன் இதற்குத்தான் குரான்… என்று இன்றுவரை வாயைத்திறக்கவில்லை. இதுவரை பாதிக்கப்பட்ட நாடுகளை வரைபடத்தில் விதவிதமான நிறங்களில் குறித்துள்ளனர். பார்ப்பதற்கு கேப்டன் கொடி போல இருக்கிறது. பன்றி என்றால் அனிமல் ஃபார்ம் கதைதான் நினைவுக்கு வருகின்றது. கட்டாயம் படிக்கவேண்டிய கதை. எல்லா அரசியல் கலாச்சாரத்திற்கும் ஏற்ற கதை. இணையத்தில் தமிழ் மொழிபெயர்ப்புகூட கிடைக்கின்றது.

கனாக்கண்டேன் கொடுத்த கே.வி.ஆனந்திடம் இருந்து இப்படி ஒரு மொக்கைபடத்தை எதிர்பார்க்கவே இல்லை. 20 ஆண்டுகளுக்கு முந்தைய கால படங்களைப்போல அடுத்தகாட்சி எதிர்பார்த்தகாட்சியாக இருக்கின்றது. சின்னப்புள்ளத்தனமான காட்சிகளை வைத்து சூர்யாவை பெரிய பிஸ்தாவைப்போல காட்டும்போது… செம காமெடி சார் நீங்க.

தலைவர் கங்குலியை இங்கும் அரசியல் செய்து கேப்டனில் இருந்து தூக்கிய கொல்கத்தா அணி தோற்பது மனதில் உள்ள வன்மங்கள் சற்று வெளிவர உதவுகின்றது. பெங்களூரும் செம அடி வாங்குவது பாவமாக உள்ளது. ஒரே மாதிரி ஆட்டங்களும், அதிக சுவாரஸியமில்லாததாலும் ஆட்டங்கள் அலுத்து விடுகின்றன.

ஐசிஎல் இல் விளையாடிய வீரர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து பெருந்தன்மையை காட்டுகிறதாம் பிசிசிஐ. ஆனால் அவர்கள் ஐசிஎல் ஐ விட்டு வெளிவர வேண்டுமாம். இந்தியாவில் அரசியல் இல்லாத இடமே இல்லை, வாத்தியார் சொன்னது போல குழந்தையின் சிரிப்பைத்தவிர மற்ற இடங்கள் அனைத்தும் மாசடைந்துள்ளன‌

சிங்கையில் தினமும் மும்மாரி பொழிகின்றது. அலுவலகத்தில் விழித்து இருக்க முடியவில்லை. குளிரில் கும்மென்று தூக்கம் வருகின்றது. என் நண்பன் ஒரு குளிர்பான வென்டிங் மெஷினில் 2 நாணயங்களை போட்டும் குளிர்பானம் வரவில்லை. பக்கத்தில் இருந்த தாளில் புகார் எழுதிப்போட்டுவிட்டு வர, இந்த வாரம் அவனுக்கு $2.00 க்கு காசோலை அனுப்பியுள்ளது அந்த கம்பெனி. இதை விட, நம்மூர் பேருந்தில் கண்டக்டர் கொடுக்கும் மீதி 25 பைசாதான் பெரிது. இந்த தம்மாத்தூண்டு ஊரில் எல்லாம் எளிது. ஆனால் இந்தியாவில் எல்லாம் பெரிது. அரசியல்வாதிகள் மாறிவிட்டால் இந்தியாவுக்கு அருகில் ஒரு நாடுகூட வரமுடியாது.

சமீபத்தில் வெளிவந்த நோக்கியா 5800வை இங்கு பலரின் கைகளில் பார்க்கமுடிகின்றது. இன்னும் நோக்கியாவால் மற்ற கம்பெனிகள் போல் எளிதான அழகான இன்டர்ஃபேஸ் வடிவமைக்க முடியாதது ஏன் என்பது எனக்கு விளங்கவே மாட்டேங்கிறது. ஆனால் நோக்கியாவின் சிம்பியன் ஆபரேடிங் சிஸ்டத்தால் கிடைக்கக்கூடிய பயன்பாடுகளுக்கு அருகில்கூட எந்த மொபைலும் வரமுடியாது. கூகுளின் ஆன்ட்ராய்ட் இன்னும் அந்த அளவிற்கு பயன்பாட்டிற்கு வரவில்லை. அது எப்படி இருக்குமோ தெரியவில்லை.

புது டொமைனிற்கு மாறியதில் இருந்து இந்த தளம் கூகுளில் எத்தனையாவது இடத்தில் வருகின்றது என்று தினம்தோறும் தேடிவருகின்றேன். அதை மேம்படுத்த முடிந்த வேலைகளையும் செய்து வருகின்றேன். கொஞ்ச காலம் முன்பு யாரோ சொன்னார்கள்/எங்கோ படித்தேன். 100க்கு 100 உண்மை

“Self-Googling is masterbation”

Posted in Experience | Tagged | 11 Comments

சித்திரம் பேசுதடி – அஞ்சாதே மற்றும் மிஷ்கின்

மிஷ்கின் திடீரென்று வந்து தனக்கென தனியிடத்தை பிடித்து தனக்கென தனி பாணியையும் உருவாக்கிக்கொண்டுள்ளவர். இங்கு திடீரென்று என்று கூறப்படுவது முதல் படத்திலேயே கவனத்தை திசை திருப்பியவர் என்றதால்.

மிஷ்கினின் படங்களில்(இதுவரை இரண்டு தான்) சில விஷயங்களை நாம் எளிதில் கவனிக்கலாம். மிஷ்கினின் படங்களில் எதார்த்தம் என்பது மிகக்குறைவாக இருக்கும். நடிகர்களின் நடிப்பில் ஒரு புதுவிதமான் நாடகத்தனம் தெரியும். இருப்பினும் மக்களின் நாடி பிடித்து அதற்கேற்றார்போல் இவரது திரைக்கதை இருப்பது தான் இவரது வெற்றியின் ரகசியம்.

இவரது சித்திரம் பேசுவதடி வெளிவந்தபோது கானா உல‌கநாதன் புண்ணியத்தில் படம் மக்கள் மனதில் இடம் பிடித்தது. பாடலுக்காக படம் பார்க்கவந்தவர்களுக்கு படத்தில் இருந்த புத்துணர்ச்சியான சில விஷயங்கள் பிடித்துப்போயின. ரவுடிகள் பிண்ணனியில் நடக்கும் காதல்கதைகள் தமிழ் சினிமாவில் ஏராளம். கிட்டத்தட்ட எல்லா தெருக்களில் இருக்கும் பழைய போஸ்டர்களில் ஒன்று இந்த வகைக்கதையுடன் தான் இருக்கும். ஆனால் இதையும் மீறி அந்த படம் வெற்றிபெற்றதற்கு காரணம் படம் முழுக்க பார்வையாளர்களை வசப்படுத்தி வைத்திருந்ததுதான். படம் இறுதியை எட்டும்போது கொஞ்சம் தொய்வாய் இருந்ததென்னமோ உண்மைதான். படம் மிகவும் பாசிடிவாக இருந்தது மேட்டினி ஷோவில் படம் விட்டுச்செல்லும் மக்களுக்கு கூட தலைவலியின்றி செல்ல உதவியது.

அஞ்சாதேவிலும் கானா/குத்துப்பாடல்கள் இருந்தாலும் படம் பெயர்பெற சித்திரம்பேசுதடி படமே போதுமானதாக இருந்தது. இயக்குனர் இந்த படத்தை திரையுலகம் மீதுள்ள வெறுப்பினால் எடுத்ததாக கூறுகிறார். அவரது நந்தலாலா வந்திருக்கவேண்டிய நேரம் அது. அந்த படத்திற்கு சரியாக கிடைக்காத ஒத்துழைப்பினால் எப்படியாவது நன்றாக ஓடும் ஒரு வர்த்தகப்படம் எடுத்து தன் பெயரை நிலைநிறுத்திக்கொள்ளும் கட்டாயத்தில் எடுத்தபடம் இது. அதனாலேயே சில காட்சிகள் பகிடி போல் இருக்கும். அஞ்சாதே சற்று அனைத்து களங்களையும்(காதல், நட்பு, சென்டிமென்ட், ரவுடிகள், துப்பறிதல்) கலந்துகட்டி ஒரு சூப்பர் மசாலாவாக இருந்தது.

இந்த இரண்டு படங்களிலும் சில விஷயங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்ந்து வந்திருந்தன. அவற்றைப்பற்றி…

  • இரண்டிலும் கதாநாயகர்கள் வீட்டை மதிப்பதில்லை
  • இரண்டு படங்களிலும் தங்கைகள் முக்கிய கதாபாத்திரங்கள். அஞ்சாதேவில் நரேன் மற்றும் அஜ்மல் இருவருக்கும் தங்கைகள் உண்டு. இரண்டு படங்களிலும் தங்கைகள் முக்கிய கதாபாத்திரங்கள்
  • ஏதேனும் ஒரு கதாபாத்திரம் எப்போதும் குடியிலேயே இருக்கும். சித்திரம் பேசுதடியில் நண்பன், அஞ்சாதேயில் பாதிபடம் டாஸ்மாக் தான்
  • சண்டைக்காட்சிகள் ஒருவன் ஒருவனுடன் மோதுவதாக இருக்கும். கூட்டமாக வில்லன் ஆட்கள் வந்தாலும் கதாநாயகனுடன் ஒருவர்தான் மோதுவான். அதுவும் சண்டை வித்தியாசமாக இருக்கும். கதாநாயகனுக்கு ஏதோ வெயில் தலைக்கு ஏறியது போல் இருக்கும் சண்டைகள்
  • ‘அய்யோ’ என்ற வசனம் இரண்டு படத்தின் கிளைமாக்ஸிலும் உண்டு. சித்திரம்பேசுதடியில் கதாநாயகன் ‘அய்யோ சாரு’ என்பான். அஞ்சாதேயில் விஜயலட்சுமி, ‘அய்யோ அண்ணா’ என்பாள். இது எதேச்சையாக நடக்கும் விஷயமாக தெரியவில்லை. சித்திரம்பேசுதடியில் இந்த வசனம் மிகப்பிரசித்தம்.
  • ரவுடிகளின் பின்புலம் வித்தியாசமான இடங்கள். சித்திரம்பேசுதடியில் வாழைமண்டி. அஞ்சாதேயில் ஒரு மெக்கானிக் ஷெட் மற்றும் ஐஸ் ஃபேக்டரி
  • இரண்டு படங்களிலும் மெல்லிய அதிர்ச்சி படத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச்செல்லும்.
Posted in Experience | Tagged | 2 Comments

கிரிவலம்

ஒவ்வொரு பௌர்ணமியும் திருவண்ணாமலைக்கு புதுசாயம் பூசுகின்றது. சாயங்கள் அனைத்தும் அவசர அவசரமாக அழிபட்டு அடுத்தநாளில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகின்றது ஊர். ஆனாலும் கிரிவலப்பாதை எங்கும் குப்பையையும் கற்பூர மணத்தையும் அப்படியே விட்டுவிட்டு.

திருவண்ணாமலையில் இருப்போருக்கு கிரிவலநாள் ஒரு அரசியல் ஊர்வலம் நடக்கும் நாள்  போல, அவ்வளவு இடையூறுகள். ஆனால் மக்கள் அழகாக புதிய வழிகளை பின்பற்றி தங்கள் கூடுகளுக்கு திரும்புவர்.

இத்தனை திருவண்ணாமலை அனுபவங்களும் நான் அங்கு கல்லூரியில் படித்த காலத்தில் கிடைத்தன. கல்லூரி காலத்தில் நாங்கள் கிரிவலம் செல்கிறோம் என்றால் அந்த தினத்தன்று எங்கள் கல்லூரியின் பேர் பெற்ற ஃபிகர் ஏதாவது கிரிவலம் செல்வதைக்கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் பல ஆண்டுகள் கழித்து இன்று செல்வது என் அலுவலக நண்பருக்காக. நண்பன் என்று சொல்லாமல் நண்பர் என்று சொல்லுவதிலேயே தெரிந்திருக்கும் அவர் ஒரு அலுவலக நண்பர் என்று. அதுவும் மேல் அதிகாரி வேறு. அவரும் நானும் பலமுறை யோசித்து இறுதியில் இன்று செயல்படுத்தி வந்துவிட்டோம்.

பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டிருந்ததால் எப்படியோ கஷ்டப்பட்டு கோவில் வாசல் அருகே வந்தோம். அங்கு மிகப்பெரிய அளவில் கற்பூரங்கள் எரிந்து சூழ்நிலையை மாற்றிக்கொண்டிருந்தது. கோவிலுக்கும் சின்னதேர் இருக்கும் இடத்திற்கும் நடுவில் இருந்த மூத்திரசந்துகூட கற்பூரமணம் கமழ்ந்தது.

கிரிவலம் மக்களுக்கு ஆன்மீகத்தை விட வயிற்றுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது என்பது வழியெங்கும் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளில் இருந்தே கண்டுகொள்ளலாம். வீடுகள் கூட அந்த ஒரு நாளுக்காக ஏதோ ஒரு விதத்தில் கடையாக மாறிக்கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒரு வியாபாரி, தனக்கேற்ற வாடிக்கையாளனுக்கோ அல்லது சந்தர்ப்பத்திற்கோ காத்திருக்கிறான். எங்களை மட்டும் விட்டுவிடுமா இந்த இட்லிக்கடைகள்? நன்றாக சாப்பிட்டபின் நடக்கத் துவங்கினோம்.

எத்தனை விதமான மனிதர்கள், கிட்டத்தட்ட சென்னை தியாகராயநகரில் விழாக்காலத்தில் இருப்பதைப்போல, பாதிபேருக்கு மேல் கண்டிப்பாக பக்தியுடன் செல்லவில்லை என்று என்னால் எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்லமுடியும். சமூகம் நம்மில் இருந்தே தொடங்குகின்றது அல்லவா!

இப்போதெல்லாம் பலர் செருப்பு போட்டு சுற்ற ஆரம்பித்துள்ளனர். முன்பெல்லாம் வெறும் காலில் இரவில் சுற்றுவோம். ஆனால் திருவண்ணாமலையின் வெயில் பகலெல்லாம் தார்ரோடால் சேமித்துவைக்கப்பட்டு இரவில் வெளிவரும். நம் கால்களை கொப்புளம் போட. ஆனால் அடுத்தநாள் நன்றாக இருப்பதாகவே தோன்றும். என் கல்லூரி நண்பன் ஒருவனுக்கு காலில் ஆணி இருந்ததால் அடிக்கடி உட்கார்ந்துவிடுவான். தோளில் கைவைத்து வருவான். இப்போது அதைப்போன்ற மக்களைப்பார்க்கும்போதெல்லாம் அவர்களுக்கு என்ன வலியோ என்றுதான் எண்ணம் செல்கின்றது

திடீரென்று கடந்து செல்லும் பக்தர்குழுக்களின் உரத்த பாடல்கள், சைக்கிளில் செல்லும்போது லாரிக்காரன் ரோட்டோரமாய் அணைத்து செல்வதைப்போல் திடீரென்று நினைவு, பேச்சு அனைத்தையும் கலைத்து வேகமாய் செல்கின்றன. இந்த பாடலை அவர்கள் மனதார‌ப்பாடுகிறார்களா அல்லது அனிச்சையாய் பாடுகின்றார்களா என்பது புதிராக உள்ளது. அப்படி மனமின்றி பாடிச்செல்பவனில் ஒருவனாவது வீட்டில் தனியாய் விட்டுவந்த மனைவி மீது சந்தேகத்துடன் இருப்பான் தானே?

இப்படி எல்லாம் தான் நான் நினைத்துக்கொண்டு நடந்துகொண்டிருக்கிறேன். என் நண்பராவது நல்ல எண்ணத்துடன் வருவார் என்று நினைக்கிறேன். அவர் மீது அலுவலகத்தில் எல்லோருக்கும் பயம் கலந்த மரியாதை உண்டு. மனிதர் எப்போது எரிந்து விழுவார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இன்று படு சாந்தமாக இருக்கிறார். யார் யாருக்கு என்ன என்ன கவலைகளோ?

அடிஅண்ணாமலை வந்தால் எப்பேறுபெற்றவனுக்கும் களைப்பு வரும். எங்களுக்கு தாகமும் சேர்ந்து வந்தது. இளநீர் குடிக்கச்சென்றொம். எல்லாவற்றையும் பற்றி கருத்து இருக்கவேண்டுமா என்ன? இளநீர் விஷயத்தில் தாகம் மட்டும்தான் இருக்கிறது.

இளநீர்க்காரன் மிக பிசியாக இருந்தான். அவனிடம் இருந்து வாங்குவதற்குள் நுரை தள்ளிவிடும்போல. கடைசியாக அவன் வாங்கிய விலையை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக விலைக்கு வாங்கினோம். என் நண்பர் விலையை பேரம் பேச முயல அது அவனுக்குள் இருந்த முதலாளித்துவத்தை எழுப்பியது. கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்ததும், அலுவலகத்தில் அனைவரையும் போட்டு வாங்கும் நண்பர் முகம் சிவக்க கைநடுங்க அவனிடம் பேசிக்கொண்டிருந்தது என்னவோ போல் இருந்தது. ஒருவேளை நான் அங்கு இல்லாமல் இருந்து இருக்கலாம் என்று நண்பர் எண்ணுபவர் போல் காணப்பட்டார். நண்பரின் பேரத்திற்கு அவன் படிந்துவராததை ஸ்ட்ராவில் என் இளநீரின் சுவையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“நீயே வச்சிக்கோ உன் இளனீய, தோப்பு விலை சொல்ற” என்றார் நண்பர் இறுதியாக‌.

“அருவா கழுத்தில் எற‌ங்கிடும். ஒழுங்கா வாங்கிட்டு போய்டு. வெட்டிவச்சிருக்க என்னை என்ன கேணப்**** நெனச்சியா? உன்கூட வந்த மனுஷன் அமைதியா குடிக்கல? உனக்கு மட்டும் என்ன ஒரு முழமா இருக்கு?” என்று இளநீர்க்காரன் அமைதியாக சொல்ல,

நண்பர், “சரி கொடு. அண்ணாமலையாருக்கு போட்டதா நெனச்சிக்கறேன்” என்றார்.

இளநீர் கொடுத்தான் என்பதை விட போட்டான் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு என் நண்பர் வாழ்நாளில் கேவலப்பட்டதே இல்லை என்பதுபோல் முகம் இருந்தது. இளநீர் விற்பவர் என்று சொல்ல மனமின்றி விற்பவன் என்று சொல்கிறேன். யார் சொல்லிக்கொடுத்தது இது?

இளநீர் குடுத்ததும் உள்ளே இருக்கும் வழுக்கைத்தேங்காயை எடுத்துக்கொடுக்க அவனிடம் இருவரும் சென்றோம். என் நண்பனைப்பார்த்ததும் என்ன நினைத்தானோ தெரியவில்லை, “அதெல்லாம் வெட்டித்தரமுடியாது இருக்கற கும்பல பார்த்த இல்ல, வேணும்னா பையில போட்டு வீட்டுக்கு எடுத்துட்டுப்போய் வெட்டித்துண்ணு” என்றான். நானும் இதற்காய் காத்திருந்தது போல, “வாங்க சார் போகலாம், இந்த இளனீல வழுக்கையே இருக்காது. நாமதான் அவசரப்பட்டு அவன்கிட்ட கேட்டுட்டோம்” என்றேன்.

நண்பருக்கு இதைவிட ஒரு நல்ல கிரிவலம் அமைந்திருக்காது என்று நினைத்திருக்கையில் 2 போலீஸ்காரர்கள் வந்தனர். இதுவரை முதலாளிபோல் இருந்த இளநீர்க்காரன் சற்று மிரள ஆரம்பித்தான்.

நடக்க ஆரம்பித்த என்னை நண்பர் நிறுத்தினார். கொஞ்சம் இருங்க ரெஸ்ட் எடுத்துவிட்டு போகலாம் என்றார்.

எதற்காக அந்த போலீஸ்காரர் அந்த இளநீர்க்காரனை அறைந்தார் என்பது கேட்கும் தொலைவில் நாங்கள் நிற்கவில்லை. ஆனால் அறை பொளேரென்று விழுந்தது மட்டும் கேட்டது. அவன் கைகட்டி குனிந்து நின்றான். அவனது பக்கத்தில் ஒரு சின்னபையனும் அதே நிலையில் கை கட்டி நின்றிருந்தான். சற்று முன் பிரம்மாண்டநாயகனாய் இருந்த இளநீர்க்காரன் திடீரென்று பாதாளத்தில் நின்றிருந்தான். என் நண்பரை மிரட்டியது மட்டும் இளநீர்க்காரன் பிரம்மாண்ட நாயகனாய்த்தெரிய காரணம் இல்லை என்று நம்பிக்கொண்டிருந்தேன்.

ஒரு பலத்தின் முன்பு அடிமையாய் கூனிக்குறுகி நின்றுகொண்டிருந்தான். முதலாளித்துவம் என்று சொன்னதை எல்லாம் திரும்பபெறுகிறேன். பலத்தின் முன் அனைவரும் சப்பைதான். அவனது அவமானத்தை ஏதோ ஒரு விதத்தில் என்னாலும் உணர முடிந்தது.

அலுவலகத்தில் மேல் உள்ளோரிடம் படும் அவமானத்திற்கு இது சற்றும் குறைந்ததல்ல. வலியோரிடம் படும் அவமானம் மட்டும் எப்பொதும் உரைப்பதே இல்லை. ஆனால் மனதில் எங்கோ சென்று மறைந்துகொள்கின்றது, மீண்டு எழ துணிச்சலின்றி அப்படியே வடு மேல் வடுவாய் படிந்து விடுகின்றது. சமயத்தில் வடுவின் வலி அதிகரிக்கும்போது, குடும்பத்திலோ இல்லை நமக்கு கீழ் உள்ளோர் மேலோ ஆயுதமாய் செலுத்தப்படுகின்றது. தற்கால வருணாசிரமம் மிகவும் கொடியதாய் உள்ளது. மனதையும் புதுவிதமாய் காயப்படுத்துகின்றது.

எல்லாம் முடிந்தபின் நண்பர் சொன்னார், “அப்போவே சொன்னேன் இல்ல, அண்ணாமலையான் பார்த்துப்பான்னு”.

எங்கிருந்தோ ஓடிவந்துகொண்டிருந்த கூட்டம் “அண்ணாமலையானுக்கு அரோகரா” என்று கத்திக்கொண்டே சென்றுகொண்டிருந்தது. இங்கு இருந்த மக்கள் கூட்டம் பக்கத்தில் இருந்த சோளக்கடைக்கு மாறிச்சென்று அங்கு கொறிக்கத்தொடங்கியது.

Posted in Story | Tagged , | 14 Comments