அதீத வேலையும், தேர்தல் பொருட்டு உடையும் பிம்பங்களும், வாக்குறுதிகளும் மனச்சோர்வை அளிக்கின்றன. கையாலாகாத்தனமும் வோட்டுகளின் பலவீனமும் இருக்கும்வரை இந்தியா வளரப்போவதில்லை. இதைப்பற்றி எழுதியும் ஒரு பலனும் இல்லை.
எழுதுவது ஏன் என்ற கேள்வியும், எதை எழுதுவது என்பது பற்றி மீண்டும் ஒருமுறை சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன். பலர் சிறப்பாக எழுதுகின்றனர் அதை படித்துக்கொண்டிருப்பதே இன்பம் அளிக்கின்றது.
சமீபத்தில் பார்த்த படங்களில் டில்லி 6, வெண்ணிலா கபடி குழு, லாடம் நன்றாக இருந்தன. லாடம் நல்ல படம் என்று சொல்லமுடியாத வரிசை ஆனால், சார்மிக்காகவும் வித்தியாசமான உருவாக்கத்திற்காகவும் பார்க்கலாம்.
ஆனந்த தாண்டவம் பாடல்கள் பற்றி ஆந்திர நண்பர் ஒருவர் கேட்டதால் கேட்டுப்பார்த்தேன். நன்றாக உள்ளன.
தேவனின் சிஐடி சந்துரு நாவல் படித்தேன். அந்த காலத்திற்கு நன்றாக இருந்து இருக்கலாம். இப்போதைக்கு நேர விரயம். கதாநாயகன் இருந்த இடத்திலேயே எல்லாம் ஞானதிருஷ்டி போல கண்டறிகின்றான். கிழக்கு பதிப்பகம் வெளியீட்டில் படித்தேன்.
கிழக்கு பதிப்பகம் ஒரு புதிய திரட்டியை ஆரம்பிக்கலாம்(எனக்கு தெரியவில்லை, இருந்தாலும் இருக்கலாம்). ட்விட்டரை முழுவதும் வியாபித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையுடன் செயல்படுவதாக தோன்றுகின்றது. ஒரு கார்பரேட் நிறுவனம் போல்.
கொஞ்சம் வித்தியாசமான தலைப்பும் அங்கும் இங்கும் இருந்து மொழிபெயர்க்கும் திறமையும் இருந்தால், கிழக்கு பதிப்பகத்தில் ஒரு புத்தகம் எளிதில் எழுதிவிடலாம். அப்படியே பெயருக்கு முன் ரைட்டர் என்று போட்டு ஒரு இணையத்தளமும் ஆரம்பித்துக்கொள்ளலாம்.
இந்த வக்கீல் போலீஸ் பிரச்சினை இத்தோடு முடியப்போவதாக தெரியவில்லை. யார் பக்கம் நியாயம் இருக்கின்றது என்பது இவ்வளவு இடியாப்பச்சிக்கலாக இருந்தால், அதை தேர்தலில் பரிமாறுவது கடினம். எனவே எதிர்கட்சிகளுக்கு இந்த விஷயம் அவ்வளவு பெரிய அவல் அல்ல.
என் தங்கையும் காதலியும் அடிக்கடி இங்கு வந்து படிப்பதால், பொறுப்புடன் எழுதவேண்டி இருக்கின்றது. எழுதிய சிலவற்றை அவசரமாக அழிக்கவும் நேரிடுகின்றது.
சில பதிவுகள் படிப்பதை மற்றும் சிலபேரை ட்விட்டரில் தொடர்வதை நிறுத்தியபின் நாட்கள் நிம்மதியுடன் கழிகின்றன.
அன்னியநாட்டு வாழ்க்கையை சீக்கிரம் முடித்துக்கொண்டு வீடு திரும்ப நாளுக்கு நாள் கோரிக்கை வலுக்கின்றது. ஏடிஎம்மில் பின் நம்பருக்கு 6 எண்களுக்கு பதில் இந்தியா போல் 4 நம்பர்கள் அழுத்தியபோதே நானும் இந்தியா செல்ல தயாராகிவிட்டேன் என்பது தெரிந்துவிட்டது.
“வெளிநாடுந்தன் வீடல்ல விடுதியடா தமிழா”
ஆனால் பொருளாதாரத்தால் வேலைவாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் எந்த முடிவும் துணிச்சலாக எடுக்க முடிவதில்லை.
எப்போதும்போல் வடுவூர் குமார் அட்டகாசமாக எழுதிவருகின்றார். துபாயில் அவருக்கு பக்கத்தில் நாமும் இருப்பதுபோல் வாராவாரம் ஊர்சுற்றிக்காண்பிக்கிறார்.